மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் டேப்ளிட் "பி.சி.'
மைக் ரோசாப்ட்,
முற்றிலும் புதிய முயற்சியாக, ஹார்ட்வேர் பிரிவில், டேப்ளட் பெர்சனல்
கம்ப்யூட்டரைத் தயாரித்து உலகிற்கு அறிமுகப்படுத்தியுள்ளது. ஹார்ட்வேர்
பிரிவில் மவுஸ், கீ போர்ட், வெப் கேமரா போன்ற சாதனங்கள் மைக்ரோசாப்ட்
நிறுவனத்தின் தயாரிப்புகளாக அவ்வப்போது வெளியாகி விற்பனையாயின. ஆனால்,
முழுமையான கம்ப்யூட்டர் இப்போதுதான் வெளியாகியுள்ளது.
Surface என்ற
பெயரில் ஜூன் 18 அன்று விண்டோஸ் 8 ஆப்பரேட்டிங் சிஸ்டத்தில் இயங்கும்,
இரண்டு மாடல் டேப்ளட் கம்ப்யூட்டர்களை, இந்நிறுவனத்தின் தலைமை செயல்
அதிகாரி ஸ்டீவ் பால்மர் அறிமுகப்படுத்தினார். இவை இரண்டும் மேக்னீசியத்தில்
உருவாக்கிய பாதுகாப்பு கவசத்தில் தரப்படுகிறது. இத்துடன் இணைத்தே
அமைக்கப்பட்டுள்ள ஸ்டாண்ட் இதனை ஒரு லேப்டாப் போல வைத்து இயக்க வசதியைத்
தருகிறது. இரு மாடல்கள் இடையே சில வேறுபாடுகள் உள்ளன. சர்பேஸ் புரோ,
இன்டெல் கோர் ஐ 5- ஐவி பிரிட்ஜ் ப்ராசசருடன், விண்டோஸ் 8 ப்ரோ பதிப்பை
இயக்குகிறது. இதனால் விண்டோஸ் ஸ்டோரில் கிடைக்கும் மெட்ரோ ஸ்டைல்
அப்ளிகேஷன்களை இதில் இயக்கலாம். வழக்கம் போல வேர்ட், எக்ஸெல் போன்ற
அப்ளிகேஷன்களையும் மெட்ரோ அப்ளிகேஷன்களையும் இதில் இயக்கலாம். போட்டோஷாப்
போன்றவற்றையும் இயக்கலாம்.
இன்னொன்றான சர்பேஸ் ஆர்.டி. கம்ப்யூட்டரில்,
என்வீடியா டெக்ரா 3 சிப் பயன்படுத்தப்படுகிறது. இதில் விண்டோஸ் 8 ஆர்.டி.
சிஸ்டம் செயல்படுகிறது. வழக்கமாக டெஸ்க்டாப் கம்ப்யூட்டரில்
பயன்படுத்தப்படும் ஆபீஸ் அப்ளிகேஷன்களை இதில் இயக்க முடியாது. அதற்குப்
பதிலாக குறைந்த அளவிலான ஆபீஸ் தொகுப்புகளை (“Office Home & Student”)
இயக்கலாம். முந்தையதைக் காட்டிலும் தடிமன் குறைவாக, குறைவான எடையில்,
சற்றுக் குறைந்த விலையில் (இன்னும் விலை அறிவிக்கப்படவில்லை) கிடைக்கும்.
இதுவரை
ஆப்பரேட்டிங் சிஸ்டத்தை முதன்மையாகத் தயாரித்து, அதற்கேற்ற
கம்ப்யூட்டர்களை எச்.பி. மற்றும் டெல் போன்ற நிறுவனங்களிடம் விட்டு
விட்டிருந்த மைக்ரோசாப்ட், முதன் முதலாக, முழுமையான கம்ப்யூட்டரைத்
தயாரித்து வழங்குகிறது. இதன் மூலம் டேப்ளட் பிசி சந்தையில், ஆப்பிள்
நிறுவனத்தின் வெற்றியை அங்கீகாரம் செய்துள்ள மைக்ரோசாப்ட், இந்த இரண்டு
சர்பேஸ் டேப்ளட் பிசிக்கள் மூலம் போட்டியில் இறங்குகிறது. இவை விற்பனைக்கு
அக்டோபர் மற்றும் அடுத்த ஜனவரியில் வரலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
1. விண்டோஸ் ஆர்.டி. சர்பேஸ்:
10.6 அங்குல கிளியர் டைப் எச்.டி. டிஸ்பிளே திரை கிடைக்கிறது. இதன்
ஆஸ்பெக்ட் ரேஷியோ 16:9 ஆக உள்ளது. இதுதான் தற்போது மானிட்டர் திரையின்
எச்.டி. வரை யறைக்கான திரையாகும். 22 டிகிரி கோணத்தில் இதன் திரை முனைகள்
உள்ளன. ஒரு பெர்சனல் கம்ப்யூட்டரின் வழக்கமான திரைக்காட்சியை இது தரும்.
இதன் எடை 676 கிராம். 9.33 மிமீ தடிமன், மைக்ரோ எஸ்.டி., யு.எஸ்.பி.,
மைக்ரோ எச்.டி.எம்.ஐ. போர்ட்கள், 2 x 2 MIMO antennae 32 அல்லது 64 ஜிபி
ஸ்டோரேஜ் டிஸ்க் ஆகியன முக்கிய அம்சங்களாகும். 31.5 தீwatthour பேட்டரி
இணைக்கப்பட்டுள்ளது. இவற்றுடன் ஆபீஸ் 15 அப்ளிகேஷன்கள், டச் கவர் மற்றும்
டைப் கவர் தரப்படுகின்றன. VaporMg Case & Stand இணைக்கப் பட்டுள்ளன.
இது தனி நபர் பயன்பாட்டிற்கானது.
2. விண்டோஸ் 8 ப்ரோ சர்பேஸ்:
முந்தைய டேப்ளட் பிசியில் தரப்படும் அதே திரை இதிலும் தரப்பட்டுள்ளது.
அதன் அனைத்து அம்சங்களும் இதில் உள்ளன. இதன் எடை 903 கிராம், 13.5 மிமீ
தடிமன், மைக்ரோ எஸ்.டி.எக்ஸ்.சி., யு.எஸ்.பி.3.0., மினி டிஸ்பிளே
போர்ட்கள், 2 x 2 MIMO antennae, 64 அல்லது 128 ஜிபி ஸ்டோரேஜ் டிஸ்க்
ஆகியன முக்கிய அம்சங்களாகும். 42 watthour பேட்டரி இணைக்கப்பட்டுள்ளது.
இந்த கம்ப்யூட்டர், நிறுவனங்கள் பயன்பாட்டிற்கு உகந்ததாக இருக்கும்.
இந்த
இரண்டு கம்ப்யூட்டர்களுடன் Touch Cover, Type Cover, Pen with Palm Block
இணைக்கப் பட்டுள்ளன. VaporMg Case & Stand தரப்பட்டுள்ளன.
இவற்றுடன்
தரப்படும் டச் கவர் (3mm Touch Cover), மனிதனுக்கும் கம்ப்யூட்டருக்குமான
புதிய உறவை அமைக்கிறது. ஒரு புதிய தொழில் நுட்பத்தினை, (pressuresensitive
technology,) இது செயல்படுத்துகிறது. இதில் தரப்பட்டுள்ள மேக்னடிக்
கனெக்டர் கீ அழுத்தல்கள், சைகைகளாக கம்ப்யூட்டர் திரையை அடைகின்றன.
இத்துடன் 5 மிமீ தடிமனில் கிடைக்கும் டைப் கவர் மூலம் வழக்கம் போல கீ
போர்ட் டைப்பிங் பழக்கத்தினை மேற்கொள்ளலாம்.
இவற்றின் திரைகள்,
எப்போதும் எந்த நிலையிலும் ஸ்கிராட்ச் அனுமதிக்காமல், புதிய பொலிவுடனேயே
இருக்கும். வழங்கப்படும் கீ போர்ட் இரு மடங்காக விரிந்து திரைக்கான
கவசமாகிறது. இதில் டச் கண்ட்ரோல்களும் உள்ளன. முதன் முதலாக மக்னீசியம்
கலந்த கவசத்தில் அமைக்கப்பட்ட கம்ப்யூட்டர் இதுதான் என்று பால்மர்
தெரிவித்துள்ளார். கீ போர்ட் மட்டுமின்றி ஸ்டைலஸ் ஒன்றும்
இணைக்கப்பட்டுள்ளது.
தொடு மற்றும் அசைவு உணர்வுகள் மூலம் இதனை இயக்கும்
வகையில் சாதனங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இதனை வைத்து இயக்க ஸ்டாண்ட் ஒன்று
இணைந்தே கிடைக்கிறது. தரப்படும் கீ போர்டையும் இதனுடன் இணைத்து இயக்கலாம்.
உங்கள்
கற்பனையில் உருவாக்க, வடிவமைக்க விரும்பும் அனைத்தையும் இவற்றின்
மூலமாகவும் மேற்கொள்ளலாம். இவற்றின் விலை அறிவிக்கப்படவில்லை என்றாலும்,
நடப்பு சந்தையில் உள்ள டேப்ளட் பிசிக்கள் மற்றும் அல்ட்ரா நோட்புக்
கம்ப்யூட்டர்களின் விலையை ஒட்டியே இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த
இரண்டு கம்ப்யூட்டர்களும் ஆப்பிள் நிறுவனத்தின் ஐ-பேட் சாதனத்தை
போட்டியில் வீழ்த்துமா என்பது சந்தேகம் என்றாலும், மைக்ரோசாப்ட்
நிறுவனத்தைத் தூக்கி நிறுத்தும் என்பதில் சந்தேகமில்லை என்று இப்பிரிவில்
பணியாற்றுவோர் கூறுகின்றனர். தன்னுடைய கேலக்ஸி டேப் மூலம், சாம்சங்,
ஆப்பிள் நிறுவனத்தின் ஐ-பேடை வெற்றி கொள்ள முயன்று முடியாமல் போனது.
ஆனாலும் சர்பேஸ் பிசிக்கள் நிச்சயம் ஒரு நல்ல போட்டியைத் தரும் என
எதிர்பார்க்கலாம்.
இதனைப் பின்பற்றி, கூகுள் நிறுவனம், இந்த ஆண்டின்
இறுதியில் தன் டேப்ளட் பிசி கம்ப்யூட்டரை வெளியிடும் என அனைவரும்
எதிர்பார்க்கின்றனர். ஆப்பிள் நிறுவனத்தின் ஐ-பேட், மைக்ரோசாப்ட்
நிறுவனத்தின் சர்பேஸ் மற்றும் சாம்சங் நிறுவனத்தின் கேலக்ஸி டேப்ளட்
பிசிக்களுடன் கூகுள் நிறுவனத்தின் டேப்ளட் பிசிக்களும் இந்த சந்தையைக்
கலக்க இருக்கின்றன.
இந்தியாவைப் பொறுத்தவரை, ஆகாஷ், மொபிலிஸ்,
சிம்ப்யூட்டர் ஆகிய நிறுவனங்கள் டேப்ளட் பிசிக்களைத் தயாரித்து விற்பனைக்கு
வெளியிட்டுள்ளன. ஆனால், நம் மக்கள் இவற்றிற்கு அவ்வளவாக ஆதரவினைத்
தரவில்லை. 2011ல், இந்தியாவில் 2 லட்சத்து 50 ஆயிரம் டேப்ளட் பிசிக்கள்
விற்பனை செய்யப்பட்டதில், 70% ஐ-பேட் பிசி மற்றும் சாம்சங் டேப்ளட்
பிசிக்களாகவே இருந்தன. இனி இவற்றுடன் மைக்ரோசாப்ட் மற்றும் கூகுள்
போட்டியிடுகையில், இந்திய தயாரிப்புகள் மக்கள் எதிர்பார்க்கும் வசதிகளுடன்
சற்று கூடுதலான வசதிகளையும் விற்பனைக்குப் பின்னர் பராமரிப்பினையும்
அளித்தால், நிச்சயம் வெற்றி பெறலாம்.