Blogger news

Wednesday, 22 August 2012

ஊக்கமருந்தாகும் உலர் திராட்சைகள்

விளையாட்டு வீரர்களின் ஊக்கமருந்தாகும் உலர் திராட்சைகள்

உலர் திராட்சைகள் விளையாட்டு வீரர்களுக்கு பயிற்சியின் மத்தியில் சாப்பிடக்கூடிய ஊக்க உணவாக பயன்படுத்துவது நன்மை பயக்கும் என்று ஆய்வின் முடிவுகள் தெரிவிக்கின்றன.

விளையாட்டுப்போட்டிகளில் கலந்துகொள்ளும் போட்டியாளர்களுக்கு தேவை உடல் வலிமை. அதிலும் குறிப்பாக தொலைதூர ஓட்டப்பந்தயங்கள் போன்றவற்றில் எண்டியூரன்ஸ் என்று ஆங்கிலத்தில் குறிக்கப்படும் நீண்ட நேரம் தாக்குப்பிடிக்கத்தக்க உடல்வலிமை மிக மிக அவசியம்.

இப்படியான தாக்குப்பிடிக்கத் தக்க உடல்வலிமையை பெறுவதற்காக போட்டியாளர்கள் பலவகையான வழிமுறைகளை கடைபிடிப்பார்கள். கார்போஹைட்ரேட் அதிகமிருக்கும் செயற்கையான இனிப்பு மிட்டாய்களை மெல்வது போட்டியாளர்கள் பலரும் செய்யும் விடயம்.

ஆனால் அப்படியான செயற்கை இனிப்புக்களை மெல்வதை விட, இயற்கையான முறையிலேயே இப்படியான தாக்குப்பிடிக்கத்தக்க வலிமையை பெறமுடியும் என்று கலிபோர்னிய பல்கலைக்கழகத்து விஞ்ஞானிகள் கண்டுபிடித்திருக்கிறார்கள். அதாவது உலர் திராட்சைப்பழங்களை மென்று சாப்பிடுவதன் மூலம் விளயாட்டுப்போட்டிகளில் தேவைப்படும் நீண்ட நேரம் தாக்குப்பிடிக்கத்தக்க உடல் வலிமையை பெற முடியும் என்று இவர்கள் தங்கள் ஆய்வின் மூலம் கண்டுபிடித்திருக்கிறார்கள்.

இதற்காக இவர்கள் செய்த ஆய்வுக்காக ஐந்து கிலோமீட்டர் தூர ஓட்டப்பந்தயத்தை நடத்தினார்கள். இதில் கலந்துகொண்டவர்களில் சிலர் வெறும் தண்ணீர் மட்டும் குடித்துவிட்டு ஓடினார்கள். வேறு சிலர் கார்போஹைட்ரேட் அதிகமிருக்கும் இனிப்புகளை சாப்பிட்டு ஓடினார்கள். மற்றவர்கள் உலர் திராட்சைப்பழங்களை சாப்பிட்டு விட்டு ஓடினார்கள்.

போட்டியின் இறுதியில் வெறும் தண்ணீர் குடித்துவிட்டு ஓடியவர்களை விட, இனிப்புகளையும் உலர் திராட்சைகளையும் சாப்பிட்டுவிட்டு ஓடியவர்கள் ஐந்து கிலோமீட்டர் தூரத்தை ஒரு நிமிட நேரம் முன்னதாக ஓடி முடித்தார்கள்.
இதிலிருந்து, கார்போஹைட்ரேட் அதிகமாக இருக்கும் இனிப்புக்களுக்கு சம்மாக உலர் திராட்சைகளும் நீடிக்கத்தக்க உடல் வலிமையை தருவதாக தெரிவித்திருக்கும் ஆய்வாளர்கள், உலர் திராட்சைகள், இயற்கையான ஊக்கசக்தியாக விளங்குவதாக தெரிவித்திருக்கிறார்கள்.

No comments:

Post a Comment